Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label சுய தொழில்கள். Show all posts
Showing posts with label சுய தொழில்கள். Show all posts

July 5, 2017

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: செலவே இல்லாமல் விளம்பரம்செய்யலாம்


உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி' திரைப்படத்தின் புகைப்படங்களும் போஸ்டர்களும் விமானத்தின் வெளிபுறத்தில் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். இந்தியாவில் எந்த ஒரு நடிகரின் படத்தையும் இதேபோல் விமானத்தில் விளம்பரப்படுத்தியதில்லை. ஆக, தனிநபர் திறமையாக இருந்தாலும் சரி, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களானாலும் சரி, பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என எந்த ஓர் ஊடகமானாலும் அவை மக்களைச் சென்றடைய விளம்பரம் அவசியமாக உள்ளது.

விளம்பரம் அவசியம்

பத்திரிகைகளில் வெளியாகும் விறுவிறுப்பான தொடர்கள், எ.ஃப்.எம்.மில் ஒலிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள், சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள், குறும்படங்கள் முதல் திரைப்படங்கள்வரை அத்தனைக்கும் விளம்பரங்கள் தேவையாக இருப்பதைப் பிரதான சாலைகளில் உள்ள பிரம்மாண்டமான பேனர்களும் சுவரொட்டிகளும் பறைசாற்றுகின்றன.

பத்திரிகைக்கு வானொலி-தொலைக்காட்சி விளம்பரங்கள், வானொலிக்கு பத்திரிகை-தொலைக்காட்சி விளம்பரங்கள், தொலைக்காட்சிக்கு வானொலி-பத்திரிகை விளம்பரங்கள். திரைப்படங்களுக்கோ பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என அத்தனை யிலும் விளம்பரங்கள். இப்படி ஊடகங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயம். தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், ஊடகங்களோடு இணையத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்ஸ் விளம்பரங்களும் சேர்ந்துகொண்டுள்ளன.

ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்

இன்று விளம்பரங்கள் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக உள்ளன. காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் செய்தித்தாள்களில், காலையில் சுப்ரபாதம் காட்சி கொடுக்கும் தொலைக்காட்சியில், கிசுகிசு குரலில் காதோடு பேசி நிகழ்ச்சிகளை நடத்தும் வானொலியில், வீட்டுத் தொலைபேசியில், கையில் உள்ள அலைபேசியில், சாலையில் திடீரென முளைக்கும் விளம்பரப் பலகைகளில், பஸ்-ரயிலுக்கான காத்திருப்புகளில் திணிக்கப்படும் பிட்நோட்டீஸ்களில், நாம் அணியும் சட்டைகளில், தொப்பிகளில், கடிதங்களில், விற்பனையாளர்கள் வீட்டு வாசலில் வந்து விற்கும் பொருட்களில் என அத்தனையிலும் விளம்பரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாம் எந்த பிராண்ட் க்ரீம், பவுடர், சோப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தொடங்கி, எந்த மாடல் பைக், கார் வாங்க வேண்டும் என்பதுவரை நம்மை இயக்குபவை விளம்பரங்கள்தான். நாம் எந்த இடத்தில் வீடு வாங்க வேண்டும் என்பதையும் அவைதான் நிர்ணயம் செய்கின்றன. நம்மை மட்டும் அல்ல, நம் குழந்தைகளையும் விளம்பரங்கள்தான் வளர்க்கின்றன. அவர்கள் சாப்பிடும் டிபன் முதல் குடிக்கும் சத்து பானம் வரை அனைத்துமே விளம்பரங்களின் தாக்கம்தான்.

இமெயில், ஃபேஸ்புக், பிளாக், டிவிட்டர், யு-டியூப், வெப்சைட் என இணைய உலகையும் விளம்பரங்கள் விட்டுவைக்கவில்லை. சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதும், காலத்துக்கு ஏற்ப விளம்பரங்கள் தங்கள் ஆளுமையைச் செலுத்திவருவதும் இன்று பெருகிவருகின்றன.

இப்போதெல்லாம் பத்திரிகைகள் வானொலி,தொலைகாட்சிகளில் வரும் பெரும்பாலான கார்ப்பரேட் விளம்பரங்களில் அவற்றின் வலைதளம் மற்றும் சமூக வலைதள முகவரிகளைக் கொடுக்கிறார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போலப் பத்திரிகைகளில் நேரடியாக ஒரு பக்க விளம்பரம் கொடுத்துவிட்டு, மறைமுகமாகச் சமூக வலைதளத்தில் கணக்கிலடங்கா இணையப் பக்கங்களில் எழுத்துகளாகவும் படங்களாகவும் வீடியோக்களாகவும் விளம்பரம் செய்து கொள்ள இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

உதாரணத்துக்கு, ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் (amazon), பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் ஓ.எல்.எக்ஸ் (OLX), வெப்சைட் பெயரை ரெஜிஸ்டர் செய்ய உதவும் கோடாடி (Godaddy) போன்ற வெப்சைட்டுகளின் பெயர்கள் வயது வித்தியாசமின்றி நம் அனைவர் மனதிலும் ஏறி உட்கார்ந்துகொண்டதற்குக் காரணம் அவற்றுக்குக் கொடுக்கப்படும் தொலைக்காட்சி, எ.ஃப்.எம் / பத்திரிகை விளம்பரங்களே. www என்ற மூன்று எழுத்துகளில் உலகை ஆளும் வெப்சைட்டுகளும் உள்ளூரில் செல்லுபடியாக மீடியா விளம்பரங்களும் அவசியமாகின்றன. இப்போது நடந்துகொண்டிருப்பது விளம்பரப் புரட்சி.

கைகொடுக்கும் இலவச விளம்பரங்கள்

முன்பெல்லாம் நாம் ஒரு பிசினஸ் ஆரம்பித்தால் என்ன செய்வோம்? நம் பிசினஸின் தன்மைக்கு ஏற்ப அந்த பிசினஸ் நன்றாக இருக்கும் இடத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுப்போம். நாம் செய்யும் பிசினஸுக்குப் பொருத்தமான பெயரைச் சூட்டுவோம். பிறகு நம் பெயர், நம் பிசினஸின் பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தாங்கிய விசிட்டிங் கார்டைத் தயார்செய்வோம். இதுதான் நம் பிசினஸுக்கு முதல் கட்ட விளம்பரமாக இருந்தது. மிஞ்சிப்போனால் நம் பிசினஸைப் பற்றி விரிவாக பிட்நோட்டீஸ் அடித்து பிரபலப்படுத்துவோம். பின்னர், நம் நிதி நிலைமைக்கு ஏற்பப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரம் கொடுப்போம்.

ஆனால், இன்று நாம் செய்துகொண்டிருக்கும் பிசினஸுக்குத் தேவையான விளம்பரங்களை இன்டர்நெட் மூலம் பத்திரிகைகளில் வருவதுபோல எழுத்து வடிவிலும், வானொலியில் வருவதைப் போல ஒலி வடிவிலும், தொலைக்காட்சியில் வருவதைப் போல ஒளி வடிவிலும் நாமே செலவில்லாமல் செய்துகொள்ளவும் அல்லது குறைந்த செலவில் செய்துகொள்ளவும் உதவும் தொழில்நுட்பங்கள் விரல் நுனியில் காத்திருக்கின்றன.

நம் வீட்டிலோ அல்லது நம் சொந்தக் கடையிலோ / அலுவலகத்திலோ நேரடியாக நாம் செய்துகொண்டிருக்கும் பிசினஸுக்கு ஆன்லைனிலும் ஓர் அலுவலகம் தேவை. அதில் நடைபெறும் பிசினஸ்தான் ஆன்லைன் பிசினஸ்.

ஆன்லைனில் வேலை / பிசினஸ் என்பது யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை கொடுத்து அதை நீங்கள் ஆன்லைனில் செய்வதன் மூலம் சம்பாதிப்பது மட்டும் அல்ல. உங்கள் திறமை, படிப்புக்கு ஏற்ற பிசினஸை நீங்களாகவே உருவாக்கி, அதை ஆன்லைனில் விரிவுபடுத்தி, பிரபலப்படுத்திக்கொள்வதும் திறமையே! எனவே உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை பிசினஸ் ஆக்குங்கள்.

May 20, 2017

இவரை தெரியுமா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்


தமிழ்நாட்டில் சமையல் செய்வதை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய், மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.
கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் அசைவ உணவுகள் சமைப்பதில் கைதேர்ந்தவர்.
இதைவைத்து இவர்கள் குடும்பம் கடந்த ஆறு மாதங்களாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.
மாட்டிறைச்சி குழம்பு, ஆட்டு குடல் குழம்பு, இறால் குழம்பு ,வாத்து கறி போன்ற நாக்கில் எச்சில் ஊறும் அசைவ உணவுகளை ஆறுமுகம் சமைக்க அதை கோபிநாத் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.
அவர் குடும்பம் இதற்கு உதவியாக இருக்கிறது.
Village Food Factory என்னும் தனி யூடியூப் சேனல் கோபிநாத்துக்கு உள்ளது.
கூகுள் ஆட்சென்ஸ், பங்குதாரர் வலைத்தளங்கள் மற்றும் சேனல்களின் விளம்பரங்களை மூலம் கடந்த ஆறு மாதங்களில் இந்த குடும்பம் 6.5 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.
இது குறித்து கோபிநாத் கூறுகையில், இதுவரை 42 சமையல் வீடியோக்களை வெளியிட்டுள்ளோம். என் தந்தை தற்போது யூ-டியூப் பிரபலமாக வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இதுவரை எங்கள் வீடியோவை 30 மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். முதல் மாதம் எங்களுக்கு 8000 வருமானம் தான் வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் வர ஆரம்பித்தது என பெருமையுடன் கூறுகிறார்.
1000 வீடியோவை பதிவேற்றுவதும், பிற்காலத்தில் ஹொட்டல் தொடங்குவதும் இந்த குடும்பத்தின் திட்டமாக உள்ளது.


May 1, 2017

நூடுல்ஸ் தயாரித்தால் அதை சந்தை படுத்துதல் - சிறு தொழில்


நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ என்று கூறுகிறார் கோவை அஜ்ஜனூரை சேர்ந்த பூமாலை. அவர் கூறியதாவது: சொந்த ஊர் ஊட்டி. மதுரை காமராஜர் பல்கலையில் எம்ஏ பொது நிர்வாகவியல் படித்துள் ளேன். திருமணமான பின், கண வர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறேன். சிறுவயது முதலே  சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை.

பெரும்பாலானோர் விரும்பும் நூடுல்ஸ் தயாரிக்க முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில் நூடுல்ஸ் தயாரிப்பு பயிற்சி அளிப்பதை அறிந்து அங்கு ஒரு மாதம் பயற்சி பெற்றேன். பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக நூடுல்ஸ் தயாரித்து விற்கிறேன். தினமும் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்களை பல்வேறு பிராண்ட் நிறுவனங்களுக்கு விற்கி றேன். அதை வாங் கும் நிறுவனங்கள் தங் கள் நிறுவன பெயரில் விற்கின்றனர்.

சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கிறேன். புதிய சுவைகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். புதுப்புது வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஆர்டர்கள் குவிகின்றன. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

தயாரிப்பது எப்படி?

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.  அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.

பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார். பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் இடம்

மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.

தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடி யாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.

முதலீடு

பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம், வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம், 50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம். மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.

கட்டமைப்பு

இயந்திரங்களை நிறுவ, பொருட்களை  இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.

உற்பத்தி செலவு

ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.

வருவாய்

15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால்  லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு

அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது.  மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால்  தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்கள் தயாராக இருக்கின்றன.

April 16, 2017

உன்னால் முடியும்: மாத்தி யோசித்தால் மகத்தான வருமானம்


விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை. அந்த முயற்சிகளில் இறங்குகிறபோது விவசாயிகளும் தொழில்முனைவோராக மாறுகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாயிகள் பலரும் மதிப்புக் கூட்டல் தொழில்முனைவோராக உள்ளனர். அதில் ஒருவர்தான் உடுமலைப்பேட்டை சித்தார்த். தென்னை பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘`வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

நான் பொறியியல் படிப்பும், என் தம்பி கௌதம் எம்பிஏவும் படித்துவிட்டு கோவையில் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதன் பலன் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. தென்னையில் பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் நாமும் ஏதாவது தயாரிப்பில் இறங்கலாம் என யோசித்தோம். அதற்காக தென்னை சார்ந்த தயாரிப்புகள் குறித்த தேடலில், தென்னைச் சர்க்கரை தயாரிக்கலாம் என முடிவெடுத்தோம். தென்னையிலிருந்து பதநீர் எடுத்து அதிலிருந்துதான் இந்த சர்க்கரை தயாரிக்க முடியும். இந்த முயற்சிக்கு தென்னை மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களும் கிடைத்தன.

சோதனை முயற்சியாக முதலில் 10 மரங்களில் மட்டும் பதநீர் எடுத்தோம். தொடங்கினோம். நாட்டுச் சர்க்கரைப் போலத்தான் இதன் தயாரிப்பு முறை என்றாலும், தென்னம் பதநீருக்கான பக்குவம் வேறு என்பது எங்களுக்கு பிடிபட ஒரு ஆண்டு ஆனது. பதம் கொஞ்சம் முன் பின் ஆனாலும் நாம் எதிர்பார்க்கும் தரம் கிடைக்காது. பாரம்பரிய தொழில்நுட்பம்தான் என்றாலும், நவீன சாதனங்களையும் பயன்படுத்தினோம். முக்கியமாக யாரிடமும் போய் கற்றுக் கொள்ள முடியாத சூழலில் நாங்களே எல்லா தவறுகளையும் செய்து அதிலிருந்து கற்றுக் கொண்டோம்.

ஆரம்பத்தில் இதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கோயம்புத்தூரில் முக்கிய கடைகளில் இதை விற்பனைக்கு கொண்டு சென்றோம். தொடர்ச்சியாகக் கிடைக்குமா என்பதும், பெரிய உற்பத்தியாளரா என்பதும் முதல் கேள்வியாக இருந்தது. இதற்கு பிறகு உற்பத்தியை அதிகப்படுத்தியதுடன் டெட்ரா பேக் முறையில் பேங்கிங்கிலும் நவீன வடிவம் கொடுத்தோம். தற்போது கோயம்புத்தூரிலேயே ஆர்கானிக் கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். தற்போது ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தும் வருகிறோம்.

தொடக்க முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தென்னம்பதநீர் எடுப்பதை 60 மரங்களுக்கு என அதிகரித்தோம். இதிலிருந்து சேகரிக்கப்படும் பதநீரைக் கொண்டு மாதத்துக்கு 400 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். சராசரியாக இதன் விலை தற்போது ரூ.400 வரை விற்பனை ஆகிறது. எல்லா வகையிலான செலவுகள் போக விவசாயிகளுக்கு லாபம் நிச்சயம் என்பதை எங்களது அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும். முதலில் எங்கள் வேலைகளினூடே பகுதி நேரமாக இதற்கான வேலைகளைச் செய்தோம். தற்போது முழுமையாக கவனம் செலுத்துகிறோம்.

இந்த தொழிலில் இறங்க அதிக தென்னைமரங்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. குறைந்தபட்சம் 10 மரங்கள்கூடபோதும். அந்தந்த பகுதியிலேயே தொடங்கலாம். ஆனால் பதநீர் இறக்குவதற்கான அனுமதி, தென்னை வாரிய வழிகாட்டுதல்கள் தேவை. தவிர உணவுதர சான்றிதழும் வாங்க வேண்டும்.

இப்போது தென்னை பதநீர் இறக்க 5 நபர்களும், உற்பத்தியில் ஐந்து நபர்களும் உள்ளனர். எங்களது இந்த முயற்சிகளுக்கு வீட்டில் உள்ளவர்களது முழு ஒத்துழைப்பும் கிடைக்கிறது. தேங்காய், இளநீர் விற்பனை மூலம் கிடைக்காத வருமானம் இதன் மூலம் கிடைப்பதால் அப்பாவும் உற்சாகம் தருகிறார்.

அடுத்த தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபடும்போது அதை வேறு வகையில் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் எங்கள் அனுபவத்தில் மூலம் சொல்ல வருவது என்றார். எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் இந்த வகையில் முயற்சித்தால் மதிப்பு கூட்டு தொழிலிலும் மகத்தான வருமானம் பார்க்கலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

April 9, 2017

இன்று தங்கம் விற்கும் விலைக்கு அதை வாங்க முடியாதவர்களுக்கெல்லாம்


 ஃபேன்சி நகைகள்தான் சரியான தேர்வு. சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் தங்க நகைகளை நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை. அதனால்தானோ என்னவோ இந்த செயற்கை நகை தயாரிப்புத் தொழிலுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

ஃபேன்சி நகைகள் விலை குறைவு. அதே வேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கவனத்தை மட்டுமே ஈர்த்து வந்த ஃபேன்சி நகைகள் இப்போது எல்லா தரப்பு பெண்களையும் தேடி வர வைத்துவிட்டது. பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில். இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம். சாதாரண களிமண்ணில் செய்வதுதான் இந்த டெரக்கோட்டா நகைகள்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது. உடல் சூட்டைத் தணிக்கக் கூடியது. மெட்டல் நகைகளைப் போல அலர்ஜியை உருவாக்காதது. எந்த டிசைன், எந்த கலரிலும் செய்யக் கூடியது. எல்லாத்தையும் விட, தோற்றத்தையே கம்பீரமாக மாற்றக் கூடியது. மேலும்  கம்மல்கள் பார்ப்பதற்கு மிக அழகாகவும், அதே நேரம் தற்காலத்தில் பயன்படுத்துவது போன்று வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த நகையை விரும்பி அணிகின்றனர்.

இந்த வாய்ப்பை எல்லாரும் பெறும் வகையில் விசேஷ பயிற்சியை அளித்து வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஷாம்பவி டெரகோட்டா ஜுவல்லரி. தி நகரில் சுப்ரஜா என்பவர் டெரகோட்டா ஜுவல்லரி செய்வது எப்படி என்று வகுப்பு நடத்தி வருகிறார். ‘‘பெரிய முதலீடு இல்லாத எளிய முறையில் லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு குறுந்தொழில் இது. கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கக்கூடிய எளிய தொழில்’’ என்கிறார்.

பிற மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக  வகுப்புகள் எடுத்து வருகிறார். பொறியியலில் முனைவர் பட்டம் முடித்த சுப்ரஜா. 4 ஆண்களுக்கு முன்பு  களிமண் கைவினைப் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்பட்டதனால், 6 மாதங்கள் முறையாக இந்தக் கலையை கற்றுக்கொண்டார். பிறகு மற்றவர்களும் இதைக் கற்று லாபம் பெற வேண்டும் என்று முடிவு செய்து, செங்கல்பட்டில் தன்னுடைய முதல் பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளார்.

சென்னையைத் தாண்டி இருப்பதால் அப்பகுதி பெண்களை தவிர மற்ற பகுதியில் இருந்து வருபவர்களுக்கு சிரமமாக இருந்துள்ளது. இதை உணர்ந்த சுப்ரஜா, சென்னையிலும் தன்னுடைய பயிற்சிப் பள்ளியை விரிவுப்படுத்தினார். ‘‘கல்லூரி மாணவிகள், ஐ.டி பெண் ஊழியர்கள் என அனைவருமே ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார்கள். டெரகோட்டா நகைகளுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு் இருக்கிறது.  கைவினைப் பொருள் என்பதால் வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற டிசைன்களில் ஆர்டர் எடுத்தும் செய்து கொடுக்கிறோம்.

களிமண் எடுத்து அதனை உலர்த்தி பதப்படுத்தவேண்டிய அவசியம் இல்லாமல் ,பதப்படுத்தப்பட்ட டெரகோட்டா அண் கிளே ஸ்டேசனில் கிடைக்கிறது. 10 நிமிடத்தில் 2 நகைகளை செய்து முடித்துவிடலாம். ஆனால் மண் உலர்வதற்கு ஒரு நாள் தேவைப்படும்.  நன்றாக உலர்ந்த பிறகு நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் வர்ணம் தீட்டிக்கொள்ளலாம்’’ என்கிறார் சுப்ரஜா.

ஃபேன்சி நகைகள் மட்டுமல்லாமல் கிஃப்ட் டிசைன்களும் செய்வது பற்றி கற்றுத்தருகிறார். சென்னையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறுகளில் வகுப்புகள் நடத்தி வருகிறார் சுப்ரஜா. தான் செய்யும் நகைகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார். ‘‘பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறோம். கல்லூரி நிகழ்வுகள், சென்னை டிரேட் சென்டர், ஷாப்பிங் காம்ளக்ஸ் போன்ற இடங்களிலும் ஸ்டால் அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.

இதில் எந்த விதமான இடைத்தரகர்களும் இல்லாததால் நேரடியாக மக்களிடம் எடுத்துச் செல்கிறோம். இதனால் எளிமையான முறையில் அதிக லாபத்தை ஈட்ட முடிகிறது. சுமார் 4லிருந்து 45 வாரங்களில் முழுமையாக கற்றுக்கொண்டு சுயமாக தொழில் செய்யத் துவங்கி விடலாம். மேலும் தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்தால்தான் நல்ல லாபத்தை பெற முடியும்’’ என்கிறார்.

கல்லூரி பெண்களிடம் மட்டுமே பெரும் வரவேற்பை பெற்றிருந்த டெரகோட்டா நகைகள் அனைத்துத் தரப்புப் பெண்களும் விரும்பி வாங்கி வருகிறார்கள். ‘‘போதிய விளம்பரங்கள் இல்லாததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் இதனுடைய பலன்களும், இந்த எளிய தொழில் முறையும் பரவலாகாமல் இருக்கிறது. சமூக வலைத்தளம் மூலமாகவே செய்தி அறிந்து தற்போது பெண்கள் வகுப்புகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இது வரை 100க்கும் மேற்பட்ட பேட்ச் மாணவர்கள் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். என்னிடம் கற்றுக்கொண்ட  மாணவர்களும் தனியாகவே வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். நகைகளை செய்வதற்கு மட்டும் கற்றுக்கொள்ளாமல் அதை எப்படி கற்றுக்கொடுப்பது என்பதையும் இங்கு கற்றுக்கொள்கிறார்கள். விற்பனை செய்யக்கூடிய நகைகளின் விலையை எப்படி தீர்மானிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளி்த்து வருகிறோம். தற்போது சென்னையில் டெரகோட்டா ஜூவல்லரி நல்ல வரவேற்ைபப் பெற்றிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்புகொண்டு நியூ மாடல் என்ன இருக்கிறது என்று கேட்டு வாங்கிச்செல்கிறார்கள்’’ என்கிறார் சுப்ரஜா. கல்லூரி மாணவர்களைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் ஆர்வமும் தற்போது அதிகரித்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. “இதில் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் கைவினைப் பொருட்கள் என்பதால் மிகக் குறைவான விலைக்கே கேட்கிறார்கள்.

முதலீடு குறைவு என்றாலும் இதில் உழைப்பு அதிகமாக இருப்பதை அவர்கள் உணர வேண்டும். டெரகோட்டா தவிர மற்ற பொருட்கள் எல்லாமே தரமானதாக பயன்படுத்தி வருகிறோம். டெரகோட்டா நகைகள் விற்கப்படுகின்ற இடங்களைப் பொருத்து அதன் விலை மாறுபடுகிறது. பெரிய கடைகளில் விற்றால் பேரம் பேசாமல் வாங்கிச்செல்கிறார்கள். ஆனால் ஸ்டால் போட்டு விற்பதால் அதனைக் குறைத்து மதிப்பிடுவதுதான் வேதனை அளிக்கிறது’’ என்கிறார் சுப்ரஜா. மண்ணையும் பொன்னாக்கும் இவரது முயற்சி இளம் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

March 28, 2017

சூப்பர் லாபம் தரும் செட்டிநாடு பலகாரங்கள்


எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு இட்லி. உடல் நலமில்லாதவர்களுக்குக்கூட பாதுகாப்பான உணவாகப் பரிந்துரைக்கப்படுகிற எளிய உணவு.  செய்யச் சுலபமானதுதான்... ஆனால், பல வீடுகளிலும் இட்லி, இட்லியாக வராததுதான் பிரச்னையே! வெள்ளை வெளேரென, மல்லிகைப்பூ இட்லி என்பது ஓட்டல்களில் மட்டும்தான் சாத்தியமா என்கிற கேள்வி பலருக்கும் உண்டு.‘‘உண்மையைச் சொல்லணும்னா இட்லி தயாரிக்கிறதுல ஏராளமான நுணுக்கங்கள் இருக்கு. தரமான அரிசி, உளுந்தைத் தேர்ந்தெடுக்கிறதுலேர்ந்து, அரைக்கிறது, கரைக்கிறது வரை இட்லி மிருதுவா வர பல விஷயங்களையும் கவனிக்கணும். அதையெல்லாம் சரியா பண்ணினாலே, எல்லாராலயும் மெதுமெது இட்லி செய்ய முடியும்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த காவேரி.

செட்டிநாட்டில் பிரபலமான பஞ்சு மாதிரியான இட்லி செய்வதில் நிபுணியான இவர், கார்பரேட் நிறுவனங்கள், அலுவலகங்கள், விசேஷங்கள் என எல்லாவற்றுக்கும்  சப்ளை செய்கிறார்.‘‘பூர்வீகம் செட்டிநாடுங்கிறதால, எங்க வீட்ல எப்போதும் அந்தப் பக்கத்து சாப்பாடு பிரதானமா இருக்கும். அதுல முக்கியமானது இட்லி. எங்க வீட்ல இட்லி சாப்பிடற யாரும், அதோட செய்முறை ரகசியம் கேட்காமப் போக மாட்டாங்க. அக்கம்பக்கத்து வீடுங்களுக்குத் தெரிய வந்து, அப்படியே அவங்கவங்க வேலை பார்க்கிற ஆபீஸ், கம்பெனிகளுக்கு சப்ளை பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. இட்லி செய்யறது ஒண்ணும் கம்பசூத்திரம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடணும். பொறுமை வேணும். அவ்வளவுதான்’’ என்கிற காவேரி, மல்லிகைப்பூ இட்லி தயாரிப்பதையே பிசினஸாக செய்ய நம்பிக்கை தருகிறார்.

‘‘பஞ்சு மாதிரியான இட்லிக்கு தரமான அரிசியும், உளுந்தும் அவசியம். உப்பும் தண்ணீரும் வேணும். முதல்ல வீட்டு அளவுல செய்து பார்க்க, ஏற்கனவே உள்ள கிரைண்டர், பாத்திரங்களே போதும். 100 ரூபாய் முதலீட்டுலகூட ஆரம்பிக்கலாம். சில கடைகள்ல செட்டிநாடு இட்லி கிடைக்குது. அது அப்படி மிருதுவா வர, சோடா மாதிரி தேவையில்லாத பொருட்களைச் சேர்க்கிறதா சொல்றாங்க. வீட்ல பண்ணும் போது வெந்தயம்கூட தேவையில்லை.

பொதுவா இட்லியை செய்த உடனே சாப்பிடணும். ஆறினா கல் மாதிரி ஆயிடும். ஆனா, இந்த செட்டிநாட்டு இட்லி எத்தனை மணி நேரமானாலும் சாஃப்டாவே இருக்கும்’’ என்கிறார் காவேரி. "இட்லி பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. தினசரி ஆர்டர் தவிர, விசேஷங்களுக்கான ஸ்பெஷல் ஆர்டரும் எடுத்தாலே பெரிய லாபம் பார்க்கலாம்’’என்கிறவர் ஒரு நாள் பயிற்சியில் செட்டிநாடு இட்லி மற்றும் உப்புக் கொழுக்கட்டை, ஆப்பம், வெள்ளைப் பணியாரம் உள்ளிட்ட 5 அயிட்டங்கள் தயாரிக்கக் கற்றுத் தருகிறார். கட்டணம் 500 ரூபாய்.

March 3, 2017

ஊர் கூடி, பங்கு வைத்து விவசாயம் காரைக்குடி அருகே விவசாயிகள் அசத்தல்


காரைக்குடி அருகே 6 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து தண்ணீரை பங்கு வைத்து விவசாயம் செய்து அசத்துகின்றனர். விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க 250 ஏக்கருக்கும் கம்பி வேலி அமைத்துள்ளனர்.காரைக்குடி அருகே வ.சூரக்குடி புக்குடி கண்மாய் மூலம் 250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இங்கு சூரக்குடி, சொக்கம்பட்டி, நங்கம்பட்டி, பூவாண்டிபட்டி, இடையன்குடிபட்டி, சொக்கானேந்தல் ஆகிய 6 கிராம விவசாயிகள் விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இவர்கள் ஆடு, மாடுகள் செல்லாத வகையில் விவசாய நிலங்களை சுற்றிலும் 3.5 கி.மீ., க்கு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கின்றனர். ஒரே ஒரு பகுதியில் மட்டும் விவசாயிகள் நிலங்களுக்கு சென்று, வரும் வகையில் நுழைவாயில் அமைத்துள்ளனர்.

நிலங்களுக்கு கண்மாய் நீரை திறந்துவிட காவலாளிகள் நியமித்துள்ளனர். அவர்கள் பங்கு வைத்து முறைப்படி தண்ணீர் திறந்து விடுகின்றனர். அவர்களை தவிர வேறு யாரும் தண்ணீர் பாய்ச்ச முடியாது. அனைவரும் நெல் சாகுபடி செய்கின்றனர். கோடையில் தண்ணீர் இருந்தால் உளுந்து பயிரிடுகின்றனர். அதிலும் கண்மாயில் இருக்கும் நீரின் அளவை பொறுத்தே சாகுபடி பரப்பும் நிர்ணயிக்கப்படுகிறது.

பெரும்பாலும் கோடையில் தண்ணீர் சிக்கனத்திற்காக ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் 6 ல் ஒரு பங்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர். கோடையிலும் காவலாளிகள் தான் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.சூரக்குடியைச் சேர்ந்த பி.சண்முகம் கூறியதாவது: கண்மாயில் உள்ள மடைகருப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு, காவலாளிகளிடம் மண்வெட்டியை கொடுத்துவிடுவோம். நாங்கள் தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டி எடுக்க மாட்டோம். அறுவடையின்போது காவலாளிகளுக்கு நிலத்துக்கு தகுந்த கூலி (நெல்) வழங்குவோம். விவசாயத்தை உயிர்நாடியாக நினைத்து வாழ்கிறோம். தண்ணீர் இல்லாத காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. 250 ஏக்கருக்கும் 2 'போர்வெல்கள்' அமைத்தால் போதும். இதற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், என்றார்.

October 9, 2016

இளைஞர்களுக்கு வழிகாட்டும் 'வேலையில்லா பட்டதாரிகள் கடை'


சேலத்தில் உள்ள செரி ரோட்டை  கடந்து செல்லும் அனைவரின் பார்வையையும் திரும்பி பார்க்கும் வகையில் சிறிய பெயர் பலகையில்  "வேலையில்லா பட்டதாரிகள் கடை" என்ற வித்தியாசமான  பெயரில் பேக்(bag), பெல்ட், பர்ஸ்  கடையை நடத்தி வருகிறார் சேலத்தை சேர்ந்த 72 வயதான ராமன்.  வேலையில்லா பட்டதாரி கடை என்பது மட்டுமே இவருடைய  கடையின் விளம்பரமும்  அடையாளமும் ஆகும். கடைக்குள் செல்லும் வழியிலும், கடையின் சுவரிலும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அடங்கியுள்ள சத்து பற்றிய விபரமும் அதனுடைய சிறப்பும், தன்னம்பிக்கை வரிகள்  அடங்கிய பட்டியல்கள் என தொங்கவிட்டு  இருப்பது இந்த கடையின் கூடுதல் சிறப்பு. படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என இருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தில் இருந்து சொந்தமாக கடை நடத்தி வருவருவதன் முலம் மற்ற இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை தந்து கொண்டு இருக்கும் இவரிடம்  சில கேள்விகளை முன் வைத்தோம்.

வேலையில்லாத பட்டதாரி கடை பற்றி சொல்லுங்கள்?

  என்னுடன் படித்த கல்லூரி நண்பர்கள் முப்பது பேர் ஒன்று சேர்ந்து கல்லூரி  படிக்கும் காலங்களிலும், படித்து முடித்த பிறகும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஐந்நூறு என வைத்து  சீசனுக்கு எற்றவாறு, தற்காலிகமாகப் பட்டாசு கடை புத்தக கடை என பல்வேறு வியாபாரங்கள்  செய்து வந்தோம். அதன் மூலம் கிடைத்த  வருமானத்தை கொண்டு, வேலையில்லா பட்டதாரி  கடையை முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். இப்போதைக்கு நான் மட்டுமே கடையை நடத்தி வருகிறேன். ஒரு சிலர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். மற்றவர்கள் தனியாக கடை வைத்து கொண்டனர். வேலையில்லா பட்டதாரிகளுக்கு பை, பெல்ட், பர்ஸ் தைப்பது பற்றியும் இலவசமாக பயிற்சி தருகிறோம் இதற்காக எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை.  இது வரைக்கும் ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு மேல் பயிற்சி தந்து விட்டோம். இனியும் தருவோம். இந்த கடையில் பயிற்சி பெற்றவர்கள் நிறைய பேர் சொந்த தொழிலும் செய்தும் வருகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பை,பெல்ட் மற்றும் பர்ஸ் போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்ற சிறிய புத்தகம் (கையேடு) ஒன்றை தருகிறோம். இது போன்று எந்த கடையிலும் தருவதில்லை.




   
கடைக்கு ஏன் இப்படி வித்தியாசமான பெயர் வைக்க காரணம்?

   கல்லூரி படித்து முடித்த போது இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் நன்பர்களாக இருந்ததால் கடைக்குப் பெயர் வைப்பதில் பிரச்சினை வந்துவிடக்கூடாது என வித்தியாசமாகவும் எங்களுக்குத்  தன்னம்பிக்கை தருவதற்காகவும் இந்த பெயரை வைத்தோம். இந்த பெயரை பார்த்து எங்களை பாராட்டியும் இருக்கிறார்கள். இது போன்ற பாராட்டுகள் தான் எங்களுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. கடையின் பெயரை பார்த்தும் நிறைய வருவார்கள். அப்போ எங்களுடைய நிலைமையும் வேலையில்லா பட்டதாரி என்று இருந்ததும் ஒரு காரணம்.





இங்குள்ள பைகளில்(bag) என்ன ஸ்பெஷல்?

  நாங்கள் பைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் அனைத்தும் தரமான பொருட்கள். தரத்தில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை. இங்கு வாங்கும் பைகள் குறைந்தது மூன்று முதல் நான்கு வருடங்கள் உழைக்கும். பைகளை எளிதாக கையாளுவதற்கு ஏற்றவாறு இரண்டு கைப்பிடிகள் வைத்து இருக்கும். பையின் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ளே வெளியே என்று இரண்டு ஜிப் இருக்கும். பள்ளி கல்லூரி மாணவர்களின் பைகளின் உட்பகுதியில் தன்னம்பிக்கை, தலைவர்களின் பொன்மொழி என பல்வேறு வாசகங்கள் அச்சிடப்பட்டு இருக்கும். இதை அவர்கள் ஒவ்வொரு முறையும்  பார்க்கும் போது அவர்களுக்கு இந்த வாசகங்கள் தைரியம் தன்னம்பிக்கையை தரும். இதுவே பெண்கள் பை என்றால் அழகு குறிப்பு சமையல் குறிப்பு என வாசகங்கள் இருக்கும்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    படித்து முடித்து உடன் வேலை கிடைக்கவில்லை என கவலைப்படக்கூடாது. படிக்கும் காலங்களில் பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். சிறுதொழில்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், அதன் மூலம் தேவையான வருமானத்தை ஈட்ட முடியும். புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொழிலில் வெற்றியோ தோல்வியோ  முயற்சி செய்ய வேண்டும்.  உங்களால் இந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் என சில பொறுப்புகள் உள்ளன அவற்றையும் பார்க்க வேண்டும்.  செய்யும் தொழிலை தெய்வமாக கருத வேண்டும்.

October 3, 2016

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: இமெயிலே நம் இனிஷியல்!


‘நல்ல காலம் பொறக்குது... உங்க வீட்ல ஒருத்தருக்கு லட்ச ரூபா பரிசு விழப் போகுது... வெளிநாட்டில் வேலை கிடைக்கப் போகுது... நல்ல காலம் பொறக்குது’ என்று குடுகுடுப்பைக்காரர் வீட்டு வாசலுக்கு வந்து குரல் கொடுப்பதாக நினைத்துவிட்டீர்களா? அதுதான் இல்லை. உங்கள் இமெயில் இன்பாக்ஸுக்கு வந்திருக்கும் மெயில்கள்தான் இப்படி சைபர் குடுகுடுப்பைக்காரர்போலக் கூப்பாடு போட்டு, உங்களைக் கவிழ்க்கக் காத்துக்கொண்டிருக்கின்றன.

இமெயில்கள் உங்களுக்குப் பரிசு கொடுக்கக் காத்திருக்கும்; உங்களுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தர தவமிருக்கும்; உங்கள் பெயரில் கோடிக் கணக்கில் டாலர்களை டெபாசிட் செய்யத் துடிக்கும். எச்சரிக்கையாக இருங்கள். எதையும் நம்பிவிடாதீர்கள். ஆனாலும், இமெயில்தான் இணைய உலகில் நம் அடையாளம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இணைய உலகில் நம் திறமையின் அடிப்படையில் நாம் செய்துகொண்டிருக்கும் பணியை வெர்ச்சுவல் பிசினஸாக்கி (இணைய பிசினஸ்), நடைமுறை விளம்பரங்களோடு இணைய விளம்பரத்தையும் செய்து, நம் வருமானத்தைப் பெருக்குவதற்கு எல்லோருக்குமே ஆசையும் இருக்கிறது, தேவையும் அதிகரித்துள்ளது.

இணைய உலகில் நாம் சுகமாகப் பயணம் செய்யவும், அது இனிதே அமையவும் நமக்கே நமக்கான இணைய அடையாளத்தைப் பெறுவதுதான் முதன்மையான வேலை.

அடையாளத்தை உறுதி செய்வோம்

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்றவை நம் அடையாளத்துக்கு ஆதாரமாக விளங்குவதைப்போல, இணைய உலகில் நம் இனிஷியலாக இருப்பது இமெயில்தான். இதுவரை இமெயில் முகவரி இல்லை என்றால் உடனடியாக இமெயில் முகவரியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஏராளமான வெப்சைட்கள் இலவசமாக இமெயில் முகவரிகளை வழங்கினாலும், ஜிமெயிலில் நமக்குப் பொருத்தமான இமெயில் முகவரியை உருவாக்கிக்கொண்டால் எல்லாச் சமூக வலைதளத் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். www.gmail.com என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்து, விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்தால் உங்களுக்கே உங்களுக்கான இமெயில் தயார்.

இமெயில் என்பது கடிதப் போக்கு வரத்துக்கு மட்டுமே என்றிருந்த நிலை மாறி, அதுவே பேஸ்புக், டிவிட்டர், லிங்க்டு இன், யூ-டியூப், வெப்சைட் என்று எல்லாச் சமூக வலைதளங்களின் நுழைவுச் சீட்டாகவும் பயன்படுவதால், இமெயில் முகவரி சுருக்கமாக இருந்தால் வசதியாக இருக்கும்.

நெட்பேங்கிங் முக்கியம்

வங்கி, மொபைல், இன்டர்நெட் மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதால் நம் மொபைல் எண்ணையும் இமெயில் முகவரியையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. ஆன்லைனில் பொருட்களை வாங்க வேண்டுமென்றாலும் விற்பனை செய்ய வேண்டுமென்றாலும் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அவசியம். டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் இவற்றுடன் நெட்பேங்கிங் வசதியையும் பெறுவது முக்கியம். இதற்கு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை அணுகவும். நெட்பேங்கிங் பாஸ்வேர்டையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

நெட்பேங்கிங் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது வங்கியில் நாம் பதிவு செய்துவைத்துள்ள நம் மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். அதை நாம் டைப் செய்தால் மட்டுமே நம் கணக்கிலிருந்து பணம் அனுப்பப்படும். அதுபோல இமெயில் மூலமும் நம் நெட்பேங்கிங் அக்கவுண்ட்டுக்குள் லாகின் செய்யப்பட்டிருப்பதையும், பணப் பரிவர்த்தனை நடைபெறுவதையும் எச்சரிக்கைத் தகவலாக அனுப்பி வைப்பார்கள்.

இவை எல்லாம் நம்மை அறியாமல் வேறு நபர்கள், நம் அக்கவுண்ட்டில் நுழைந்து நம் பணத்தைக் களவாடிச் செல்லாமல் இருக்க, அவர்கள் கொடுக்கும் பாதுகாப்பு. அடிக்கடி நாம் இமெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் மாற்றிக்கொண்டே இருந்தால் அவர்கள் அனுப்பும் எச்சரிக்கைத் தகவல்கள் நமக்கு வராமல் போகும். இப்போது எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்களை வைத்திருப்பதால் ஏதேனும் ஓர் எண்ணை நிரந்தரமாக வைத்துக்கொண்டு, அதை நம் வங்கிக் கணக்குக்காகப் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே இணைய உலகில் இனிமையாகவும் பயமில்லாமலும் பயணிக்க முடியும்.

வங்கியிலிருந்து வருவதைப் போன்றே போலி இமெயில்கள் வந்திருந்தால், வங்கியின் வெப்சைட் முகவரி https என்ற பாதுகாப்பு அடையாளத்துடன் தொடங்கியிருக்கிறதா என்று பார்க்கவும். https என்பது Hyper Text Transfer Protocol Secure என்று பொருள். அப்படி இல்லை என்றால் அது பொய்யான நபர் அனுப்பியுள்ள இமெயில் என்று அர்த்தம். https:// என்று வந்திருந்தாலும், உங்கள் வங்கியை அணுகி, அவர்களிடம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும். அதுபோல மொபைல் எண்ணுக்கு வரும் போலி எஸ்.எம்.எஸ்.களிலும் கவனமாக இருக்கவும். எந்த வங்கியும் உங்கள் நெட்பேங்கிங் யூஸர் நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றைக் கேட்காது.

ஆன்லைன் பிசினஸுக்கு இமெயிலே ஆதாரம் என்பதால், இமெயில் பாஸ்வேர்டை மறக்கக்கூடாது. அப்படி மறந்துவிட்டால் என்னென்ன நடக்கும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.


September 26, 2016

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை ) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள் - அக்டோபர் 3-ம் தேதி ஆகும்.  வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4-ம் தேதி.  வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6 தேதி.

தமிழக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19-ம் தேதி சென்னை, மற்றும் திண்டுக்கல்,(2 மாநகராட்சிகள் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21 நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வெற்றி பெறும் உறுப்பினர்கள் அக்டோபர் 26ம் தேதி பதவியேற்கவுள்ளனர். நேரடி தேர்தலுக்கு பின்பு 13,362 பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னையில்19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆறரை லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.  உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 91,098  வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.  நேரடி தேர்தல் முடிவுற்று, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும்.  தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நேரடி தேர்தலுக்கு பின் 13,362 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்  இன்று முதல் தேர்தல்  விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

September 24, 2016

தேவையற்ற பொருட்களும் கல்விக்கு உதவும்- இந்திராணி பாட்டியின் சேவை!


சில பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, 'வேஸ்ட்'... எனக் குப்பையில் நாம் எறிந்துவிடுவோம். அவை சென்னையைச் சேர்ந்த இந்திராணி பாட்டியின் கையில் கிடைத்தால் வித்தியாசமான கலை பொருட்களாக மாறிவிடும். 76 வயதிலும் தன் கைப்பட செய்த கலைபொருட்களை நவராத்திரிக்கு சில வாரங்களுக்கு முன்பாக வீட்டிலேயே ஸ்டால் அமைத்து விற்பனை செய்துவருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆண்டுக்கு ஓர் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார் எனும் தகவல் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா!

                                                                     



"எனக்கு 16 வயசுல கல்யாணம் ஆச்சு. அப்போலிருந்து என்  இருந்து இப்போ வரைக்கும் வருஷம் தவறாம நவராத்திரிக்கு கொலு வெச்சுட்டு இருக்கேன். எனக்கு விதவிதமான கலைப்பொருட்களை செய்வதில் ஆர்வம் அதிகம். 1969-ல் காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளின்போது அவரை நினைவுபடுத்துற பொம்மைகள், புகைப்படங்களைக் கொண்டு கொலு வெச்சேன். அப்போதில் இருந்து ஒவ்வொரு வருஷமும் வித்தியாசமான முறையில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடுவேன். அப்படித்தான் நாலு வருஷத்துக்கு முன்பு, தேவையில்லைனு குப்பையில எறியுற கப், மூடி, பிளாஸ்டிக், பேப்பர் பொருட்களிலிருந்து கொலு வைக்கவும், கலைபொருட்களைச் செஞ்சு விற்பனை செய்யவும் முடிவெடுத்தேன். அதன்படி என் வீட்டுல வேஸ்டாகும் பொருட்கள், கடைவீதிக்கு போறப்போ கிடைக்கிற பொருட்கள், தெரிஞ்சவங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க கொடுக்கிற பொருட்கள்ல இருந்து கலைபொருட்களைச் செய்றேன். நிறைய பேர் அவங்க வேஸ்ட் பொருட்களைக் குறைஞ்ச விலைக்கு எனக்கு கொடுக்குறாங்க.

                                                            



நவராத்திரிக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சேமிச்ச பொருட்களிலிருந்து சின்னதும், பெரியதுமான்னு என் கற்பனைக்கு, விருப்பத்துக்கு ஏற்ப கலைப்பொருட்கள், கடவுள் உருவங்கள், தோரணங்கள், பேனா ஸ்டாண்ட், கொசு விரட்டும் திரவ பாட்டில்களில் விநாயகர் சிலை என  பயனுள்ள பல பொருட்களைச் செய்வேன். இதுக்காக தினமும் ரெண்டு மணிநேரத்தை ஒதுக்குவேன். நவராத்திரிக்கு சில வாரங்களுக்கு முன்னாடியே, பூஜைக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. அதன்படி நானும் இன்னையில இருந்து என் வீட்டுலயே ஸ்டால்ஸ் போட்டு 5 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரைக்கும் நான் செய்த பொருட்களை விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். குறிப்பா பொருட்களை வாங்குறவங்க கொடுக்கிற பணத்தை என் கையில வாங்கமாட்டேன். துணியால் மூடப்பட்ட ஒரு உண்டியல்ல கஸ்டமர் கையாலயே பணத்தைப் போடச்சொல்லிடுவேன். சேல்ஸ், நவராத்திரி முடிஞ்ச பிறகுதான் அந்த உண்டியலை திறப்பேன். கிடைச்ச மொத்த பணத்தையும், எதாவது ஒரு ஸ்கூல் அல்லது காலேஜ் பொண்ணைத் தேர்வுசெஞ்சு கொடுத்து உதவுவேன். அப்புறமா மறுபடியும் வேஸ்ட் பொருட்களை கலெக்ட் செய்ய அரம்பிச்சுடுவேன்.

முதல் வருஷம் கிடைச்ச 20,000 ரூபாயை அப்போ பி.பி.ஏ., படிச்சுட்டு இருந்த ஹேமமாலினிக்கும், அடுத்த வருஷம் கிடைச்ச 18,000 ரூபாயை, பிளஸ் 1 படிச்சுட்டு இருந்த திவ்யாவுக்கும், போன வருஷம் கிடைச்ச 30,000 ரூபாயை பிளஸ் 2 படிச்சுட்டு இருந்த ஜெயசூர்யாவுக்கும் கொடுத்தேன்" எனப் புன்னகை முகத்தோடு சொல்லும் இந்திராணி பாட்டி சைக்கிள், நீச்சல் பயிற்சி இரண்டிலும் திறமைசாளி. இவ்விரண்டு பயிற்சியையும் தவறாமல் தினமும் செய்து வருகிறார்.

                                                                 



வயசாகிடுச்சேன்னு சும்மாவே உட்கார்ந்து கதைப் பேசுறதுல எனக்கு விருப்பம் இல்லை. என் மனசும், உடம்பும் ஒத்துழைக்கிற வரைக்கும் என்னோட சொந்த உழைப்பில் கிடைக்கும் பணத்தை, வருஷத்து ஒருத்தர் படிப்பிற்கு கொடுத்து உதவி செய்யணும்னு ஆசை" என மெய்சிலிர்க்க வைக்கிறார், இந்திராணி பாட்டி.

கல்விக்கு உதவும் பாட்டிக்கு... கிரேட் சல்யூட்.

600 மாடுகளை அன்புடன் பாதுகாக்கும் ஈரோடு கோசாலை!


ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாவடிபாளையத்தில் அமைந்துள்ள, கோ சேவா சங்கத்தினுடைய கோசாலை பிரசித்தி பெற்றது. தனித்தனியாக செட் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாட்டுக்கும் இடைவெளிவிட்டு சுத்தமாக சுமார் 600 மாடுகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனை பராமரிப்பதோடு மட்டுமில்லாமல், நமது பரிகார பூஜைகளையும் கூட, இங்கே இலவசமாக செய்ய வாய்ப்பளிக்கின்றனர்.

இந்த கோசாலையைப் பராமரித்து வரும் அதன் நிர்வாகி விமல் கோயல், கோசாலை பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "இந்த அமைப்பு 2004 -ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று 21 நாட்டு மாடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, 632 உள்ளூர் நாட்டு மாடுகளுடன், 10.8 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கே எந்த வெளிநாட்டு மாடுகளையும் இங்கே வளர்ப்பது இல்லை. ஒரு சில வெளிமாநில மாடுகள் வளர்க்க முடியாமல், இங்கே விட்டு சென்றுள்ளதை மட்டும் கவனித்து வருகிறோம். இங்கே கோ தானம் செய்யப்படும் மாடுகளையும் கவனித்து வருகிறோம். இந்த கோசாலை இந்தியாவில் உள்ள மற்ற கோசாலை நிர்வாகங்களுடன் தொடர்பில் உள்ளது. அதனால் பல்வேறு விதமான ஆலோசனைகள் எளிதாக பரிமாறப்படுகின்றன. இதற்கு தினசரி முப்பதாயிரம் ரூபாய் செலவாகிறது. அது மட்டுமல்லாமல் முப்பது தினசரி பணியாளர்களுக்கான கூலி என அனைத்தும் நன்கொடையாளர்களால் கொடுக்கப்படும் பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது. இங்கே மாட்டு பொங்கல், யுகாதி திருநாள், கோகுலாஷ்டமி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோ மாதாவிற்கு பற்பல பூஜைகள் சிறப்பாக நடைபெறும். ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் வார பூஜைகள் நடைபெறும்" என்றார்.



கோ சேவா சங்கத்தில் விவசாய பிரிவை கவனித்து வரும் பாலசுப்ரமணியம் இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார்... "இந்த இடத்தை வெறும் பசுக்களை பாதுகாக்கிற இடம்னு மட்டும் நினைக்கல... கோசாலையின் முக்கிய நோக்கமே நாட்டு பசு மாடுகளையும், காளை கன்றுகளை இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்குறதும்தான். நாட்டு மாட்டின் மூலம் கிடைக்கும் சாணம், கோமியம் போன்றவற்றை பயன்படுத்தி பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் போன்ற இயற்கை உரங்களை உருவாக்கவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். இயற்கை விவசாயத்தை எல்லாரையும் பின் பற்ற வைக்கணும்ங்குறதுதான் எங்களின் இலக்கு.



 கோசாலையில் வெவ்வேறு நாட்டு இன மாடுகளை கொண்டு வந்து வளர்க்கலாம். அது கிராம சுயராஜ்யத்துக்கு எதிரானது. அதனால நம்ம ஊர் நாட்டு பசுக்களையும் காங்கேயம் காளைகளையும் இங்க பராமரிச்சுக்கிட்டு வர்றோம். அது தவிர அடி மாட்டுக்கு போகிற நாட்டு மாடுகளை வாங்கி  பாதுகாக்குறோம். மாடுகளுக்கு தீவனமா தினமும் 2 டன் மக்காச்சோளத்தட்டு தேவைப்படுது. சங்கத்து மூலமா இப்போ 150 விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடறாங்க. இந்த மாதிரி ஒரு விவசாய வளர்ச்சியைதான் இந்த கோசாலை ஊக்குவிக்குது. இப்போ சில ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துறாங்க, நாங்க இயற்கை விவசாயத்தின் மூலமா பயிரிட சொல்லி இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க மாறிடுவாங்க. அதுல கிடைக்கிற நன்மைகளை பார்த்துட்டு அவங்கள சுத்தி இருக்கவங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவாங்க. பசுமை விகடன் பல பேர் விவசாயம் பண்ண தூண்டுகோலாக இருக்கு. அதே போல நாங்களும் இயற்கை விவசாயத்தை பாதுகாக்குறதுக்காக எங்களால் ஆன முயற்சியை எடுத்திருக்கோம்.



நாங்க இயற்கை விவசாயம் பண்றோம்னு சொல்லி வந்தவங்களுக்கு, இலவசமா காளைக் கன்றுங்களையும், கிடாரி கன்றுகளையும் இலவசமாக கொடுத்தோம். சிலர் அதை தவறான முறையில பயன்படுத்தப் பார்த்தாங்க, நாங்க அதைக் கண்டுபிடிச்சு தடுத்துட்டோம். இலவசமா கொடுத்தா அதுக்கு மதிப்பு இருக்கிறது இல்ல.



இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்கு அதிகம்ங்குறதால, சாவடிபாளையத்த சுத்தி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நாட்டு பசு மாடுகளுக்கு இலவசமா இனவிருத்தி செய்து கொடுக்கிறோம். இதுக்காகவே இருபது காங்கேயம் காளைகளை வளர்த்து வர்றோம். இந்த கோ சங்கத்தில் மாடு வளர்ப்பு குறித்த கருந்தரங்குகளும், நாட்டு மாடுகளின் மூலம் பஞ்சகவ்யம், ஊதுவர்த்தி, பினாயில், விபூதி மற்றும் மருத்துவ பொருட்கள் போன்றவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் இலவசமா சொல்லிக் கொடுக்குறோம்" என்றார்.

September 20, 2016

இலஞ்சியில் முதுமை இனிமையாகிறது...


வயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு,அப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.

யார் அவர்?அப்படி என்ன காரியம் செய்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள செங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.

பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர நிறுவியர்
பணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.

தலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.

இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.

காலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.

இரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.

இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.

மாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது. ஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.

இலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.மேலும் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.

அதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார். இதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.

உணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண கருவிதான் எல்லா பாராட்டும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தை சேர்ந்த டி.சோமசுந்தரம்,ஆர்.வி.துரைசாமி,எஸ்.வேங்கடசுப்பிரமணியன்,பி.கே.சண்முகசுந்தரம்,டி.சோமசுந்தரம்,எஸ்.முததுசாமி,வி.சுப்பிரமணியன்,எஸ்.தெய்வாங்பெருமாள்,குற்றாலிங்கம்,அருணகிரிநாதர்,என்.திருவேங்கடம்,ஆர்.எம்.கணபதி ஆகியோரைத்தான் சாரும், அவர்கள்தான் தேவையான ஆலோசனைளை வழங்கி வழிநடத்தி செல்கின்றனர் என்கிறார் அடக்கமாக.

மகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம், செய்து பாருங்கள் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று சொல்லி முடித்த துரை.தம்புராஜிடம் ஆலோசனை பெறவும் வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9944234499.

August 31, 2016

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!


ஆறு சுவைகள் இருந்தாலும், உணவில் பெரும்பாலும் உவர்ப்புச் சுவையையும் காரச்சுவையையும்தான் அனைவரும் விரும்புவார்கள். காரம் இல்லாத ஒரு கவளம் சோறுகூட பலரின் தொண்டைக்குள் இறங்காது. காரச்சுவைக்காக பரவலாக நாம் பயன்படுத்துவது, மிளகாயைத்தான். மிளகாயில் சாத்தூர் மிளகாய், ராமநாதபுரம் முண்டு, குடமிளகாய், ஊசி மிளகாய், பூத் ஜலக்கியா... என்று, தன்மை மற்றும் விளையும் இடங்களைப் பொறுத்து பல ரகங்கள் உள்ளன. இவற்றில், 'நெய் மிளகாய்' என்று ஒரு ரகமும் உள்ளது. இதை, சமையலுக்கு அப்படியே பயன்படுத்தும்போது லேசாக நெய் மணம் வீசுவதால், இதற்கு இப்படியொரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஏற்காடு, ஊட்டி, மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் வீட்டுப்பயிராக இந்த நெய் மிளகாய் தற்போது பயிரிடப்படுகிறது.

இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஏற்காடு பகுதிக்குச் சென்ற நாம், முருகன் நகரில் வசிக்கும் தெய்வானை வீட்டுக்குச் சென்றபோது, ''தமிழ்நாட்டுல இருந்து இலங்கைக்கு நிறைய பேர் வேலைக்குப் போனாங்க. அப்படிப் போனவங்கள்ல பலர், அங்க ஏற்பட்ட பிரச்னை காரணமா திரும்பவும் தாயகத்துக்கே வந்துட்டாங்க. இப்படி வேலைக்குப் போன நாங்க, 1972-ம் வருஷம் இந்திரா காந்தி ஆட்சியில இருந்த சமயத்துல இந்தியாவுக்கே திரும்பி வந்தோம். கூடவே அங்க இருந்து, நெய் மிளகாய் விதைகளையும் எடுத்து வந்தோம். இதை அங்க 'மூட்ட மிளகாய்’னு சொல்வாங்க. அதை இங்க விதைச்சதுல... அங்க, இங்கனு பரவிடுச்சு.

இலங்கையில எல்லார் வீட்டுலயும் 10 சென்ட், 20 சென்ட் அளவுல வீட்டுத் தோட்டம் போட்டு, தேவையான காய்கறிச் செடிகளை வளர்ப்பாங்க. அதுல இந்த மிளகாயும் கட்டாயம் இருக்கும். ஒரு மிளகாய் செடியே ஒரு குடும்பத்தோட தேவைக்குப் போதும். அந்தப் பழக்கத்துலதான் இப்பவும் இதை வளர்த்துட்டு இருக்கேன். இது நல்ல காரமா இருக்கறதால... குறைவா பயன்படுத்தினாலே போதும். இதுல மோர் மிளகாய், புளி மிளகாய் வத்தல் எல்லாமே போடலாம்'' என்றார்.

இதேபகுதியைச் சேர்ந்த நாகம்மா, ''இதுல சமைச்சா... நல்ல டேஸ்ட் கிடைக்குது. ஒரு செடியில ஆறு ஏழு மாசத்துக்கு மிளகாய் கிடைக்கும். வருஷத்துக்கு ஒருதடவை அழிச்சுட்டு, திரும்பவும் புதுசா நடணும். ஒரு செடியில மொத்தமா மூணு கிலோ அளவுக்கு மிளகாய் கிடைக்கும். மழைக்காலத்துல நல்லா காய்க்கும். இதுக்கு பெருசா உரமெல்லாம் தேவையில்ல. வெறும் தொழுவுரத்தை வெச்சாலே தளதளனு வளர்ந்து வந்துடும்'' என்றார்.

ஏற்காடு மலை படகுத்துறை அருகே பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்து வரும் தீபா, ''இதுக்கு 'பம்பர மிளகாய்'னும் ஒரு பேர் இருக்கு. இந்த எட்டு வருஷமா விற்பனைக்கும் வந்திட்டிருக்கு. ஒரு கிலோ மிளகாய் 20 ரூபாயில இருந்து 50 ரூபாய் வரைக்கு விற்பனையாகும். மழைக்காலத்துலதான் அதிகமா வரும். இந்த வருஷம் மழை குறைவா இருக்கறதால அவ்வளவா வரத்து இல்லை'' என்று சொன்னார்.

இந்த ரகத்தைப் பற்றி ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மற்றும் காய்கறிகள் துறை பேராசிரியர் முனைவர் புகழேந்தியிடம் கேட்டபோது, ''கேப்சிகம் சைனென்ஸ் (சிணீஜீsவீநீuனீ நீலீவீஸீமீஸீsமீ) எனும் இனத்தைச் சேர்ந்ததுதான் இந்த 'நெய் மிளகாய்’. இதன் பூர்வீகம், அமெரிக்காவுக்கு அருகில் உள்ள டிரினிடாட் தீவில் உள்ள மொருகா என்கிற மாவட்டம். இங்கு இருந்துதான் பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. வெப்பமண்டல நாடுகளில், மிதவெப்பம் இருக்கும் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மிளகாய் 17 முதல் 32 டிகிரி வெப்பநிலையில் வளரும் தன்மை கொண்டது.

இதை நம் ஊரில்  பெரும்பாலும் வீடுகளில் தான் வளர்க்கிறார்கள். அதிக காரம் கொண்ட இந்த மிளகாயில் தயாரிக்கப்படும் மசாலா, நல்ல மணத்துடன் இருக்கும். இந்த மிளகாயிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த மிளகாய்ச் செடியின் ஆயுட்காலம் ஓர் ஆண்டு. 4 அடி முதல் 5 அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது. நடவு செய்த மூன்று மாதங்களில் காய்க்க ஆரம்பிக்கும். ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காய்ப்பு நன்றாக இருக்கும். கோடைக் காலங்களில் காய்ப்பு குறைந்து விடும்.

தமிழ்நாட்டில் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், குன்னூர் ஆகிய  மலைகளில் இருக்கும் விவசாயிகள்... அவர்களின் தேவைக்காக மட்டும் இந்த மிளகாய் ரகத்தை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கின்றனர். இந்த ரக மிளகாய்களை அதிகமான அளவில் சாகுபடி செய்து, நேரடியான விற்பனையில் இறங்கினால், நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்று சொன்னார்.

கின்னஸ் சாதனை!

மிளகாயின் காரத்தன்மை 'ஸ்கோவில் ஹீட் யூனிட்’ (Scoville Heat Units)  எனும் அலகில் அளக்கப்படுகிறது. தமிழ்நாட்டுல 0 யூனிட் அளவிலிருந்து 30 ஆயிரம் யூனிட் அளவு வரை உள்ள மிளகாய் ரகங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2011-ம் ஆண்டு சராசரியாக 10 லட்சத்து 41 ஆயிரத்து 427 யூனிட் அளவு காரத்தன்மை கொண்ட வடஇந்தியாவைச் சேர்ந்த 'பூத் ஜலக்கியா’ மிளகாய்க்கு உலகிலேயே காரமான மிளகாய் என்று கின்னஸ் விருது கிடைத்தது. 2012-ம் ஆண்டு அந்த சாதனையை 'நெய் மிளகாய்' முறியடித்தது. 'டிரினிடாட் மொருகா ஸ்கார்ப்பியன்’(trinidad moruga scorpion) என்று அழைக்கப்படும் நெய் மிளகாயின் கார அளவு, 14 லட்சத்து 69 ஆயிரத்து 700 யூனிட். 2013-ம் ஆண்டு 'கரோலீனா ரீப்பர்’ (Carolina reaper)  என்கிற ரகம், நெய் மிளகாயின் சாதனையை முறியடித்துவிட்டது!

ஆராய்ச்சி!

இந்த நெய் மிளகாய் ரகம் பற்றி நமக்குத் தகவல் சொன்னவர், 'பத்மஸ்ரீ’ விருது பெற்றிருக்கும் புதுச்சேரி, வெங்கடபதி. இதன் மூலம் புதிய ரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், ''சில மாதங்களுக்கு முன்பு காட்டுக் கனகாம்பர ரகங்களைத் தேடி, மூணாறு மலைப் பகுதிக்கு போயிருந்தோம். அங்கே வித்தியாசமான ஒரு மிளகாய் ரகம் இருந்துச்சு. அந்த மிளகாய் ரகத்துல ஒரு கிலோ வாங்கிட்டு வந்து சமைச்சு, சாப்பிட்டுப் பார்த்தோம். நெய் வாசனையோட, காரமும் இருந்துச்சு. சில மிளகாய்களை நண்பர்கள்கிட்ட கொடுத்து, சமைத்துப் பார்க்கச் சொன்னோம். அவங்களும் சுவையாவும், மணமாவும் இருக்குனு சொன்னாங்க. பிறகு, இந்த மிளகாய் ரக விதைகளை முளைக்க வைச்சு... சோதனை செய்துட்டிருக்கேன். அணுக்கதிர் வீச்சு மூலமாவும், 'பரமக்குடி மிளகாய்’ ரகத்தோட இணைச்சும் புதிய மிளகாய் ரகம் உருவாக்கவும், முடிவு செய்திருக்கேன்'' என்றார், வெங்கடபதி.

August 11, 2016

விவசாயத்திற்கு உயிர்கொடுத்த தமிழ்வாணன்! தருமபுரி மாவட்ட தனி ஒருவன்


தருமபுரி மாவட்டம் பி.துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த தமிழ் வாணனுக்கு தண்ணீர் மீது காதல்.  விவசாயியான அவர்,   தன் குடும்பத்தை விடுத்து ஊரில் உள்ள நிலங்கள் வறண்டு கிடப்பதை பார்த்துப்  பரிதாபப்பட்டார்.  துரிஞ்சிப்பட்டியில்  ஒன்பதரை ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் கிருஷ்ணசெட்டி ஏரியில் தண்ணீர் நிரப்பினால்  ஏரியைச் சுற்றியுள்ள 450 ஏக்கர்களுக்கு நிலத்தடி நீரை பரவச்செய்ய முடியும். ஆனால்,  மேட்டுப்பகுதியில் இருக்கும் கிருஷ்ணசெட்டி  ஏரியில் மழைக்காலத்தில் கூட தண்ணீர் நிற்காது.

அந்த ஏரியில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலேயே சேர்வராயன் மலையிலிருந்து பிறக்கும் வேப்பாடி  காட்டாறு ஓடுகிறது. பருவ மழைக்காலங்களில் வேப்பாடி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் கூட  அது கிருஷ்ண செட்டி ஏரியைப் பொருத்தவரையில்   கைக்கு எட்டா கனியாவே இருந்தது.



ஏதோ  ஒரு சந்தர்ப்பத்தில் காவிரி படுகைகளில் நீரேற்று முறையைப்  பார்த்த தமிழ்வாணன் அதே போன்ற  நீரேற்று முறையில் வேப்பாடி ஆற்றிலிருந்து கிருஷ்ணசெட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்துவிடலாமென  திட்டம் தீட்டியிருக்கிறார்.   மழைக்காலங்களில்  ஊற்றெடுத்து நிற்கும் வேப்பாடி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் பஞ்சாயத்து  கிணற்று நீர் யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது.  அதிலிருந்து கிருஷ்ண செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு போக முடிவு செய்திருக்கிறார். அதை அரசாங்க உதவியின்றி சாதித்தும் காட்டிவிட்டார்.

அந்தத்  திட்டத்துக்கு ஒரு கோடிக்கும் மேல் செலவாகியிருக்கிறது. தமிழ்வாணன்  தனி ஒருவரால்  அந்த தொகையை புரட்ட முடியாது என்பதால் 40 விவசாயிகளை ஒன்றிணைத்து விடியல் நீரேற்றுப் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்வள பாதுகாப்புச் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து,  அவர் வேலை பார்க்கும் கூட்டுறவு வங்கியில்  40 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மீதித்  தொகையைத்  தன் பெயரில் கடனாக நண்பர்களிடம் வாங்கி இதை சாதித்திருக்கிறார். தமிழ்வாணனுக்கு ஒத்துழைப்புக்  கொடுத்த 40 விவசாயிகளில் ஒரு சிலரே இப்போது தமிழ்வாணனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏரிக்கு அருகில் உள்ள நில உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்திற்குப் பணம் தரவில்லை என்ற நிலையிலும்,  இது நிகழ்ந்துள்ளது.

ஆனால்,  தமிழ்வாணனோ “ இதை விளம்பரத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ செய்யவில்லை. நமக்குப்  பின் வரும் நம் சந்ததிகள் இதைப்  பயன்படுத்திக்கொண்டால் அதுவே போதுமானது. இதற்காக எங்க வீட்டில் பல பிரச்னைகள் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி இதைச் செய்திருக்கிறேன்.  இது என் 25 ஆண்டுகால கனவு. பல நண்பர்கள், விவசாயிகள் இதற்காக உதவி செய்திருக்கிறார்கள். அப்படியும்  தொகை போதுமானதாக இல்லை. இந்தத்  தண்ணீரால் பயனடைபவர்கள் கூட பணம் தர மறுக்கிறார்கள். முன்பே அரசாங்கத்தின் மூலம் முயற்சி செய்திருக்கலாம். ஏன் இதை நாமே செய்துவிடலாமே 200 விவசாயிகள் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்தாலே போதுமே என்று நினைத்தேன். ஆனால்,  யாரும் இப்போது கை கொடுக்கவில்லை.  இந்தச்  செயல் அரசாங்கத்தைச் சென்றடைந்தால் அதுவே போதும், மற்ற ஊர்களில் உள்ள விவசாயிகள்  இதேபோன்ற திட்டத்தைச்  செயல்படுத்தி விவசாயத்தைச்  செழிக்க செய்தால் எனக்கு அதுவே போதும். யாருக்கு வேண்டுமானாலும் வழிகாட்ட தயராகவே இருக்கிறேன்" என்றார்.



தமிழ்வாணன் போல் ஊருக்கு ஒருவர் இருந்தால், விவசாயம் புத்துயிர் பெறும்!

August 8, 2016

‘திடுக்.. திடுக்..’ திருப்பூர் பின்னலில் சிக்கும் பெண்களின் வாழ்க்கை


பின்னலாடை தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடிக்குமேல் நாட்டிற்கு வருவாய் ஈட்டித்தருவதோடு, ‘டாலர் சிட்டி’ என்ற கிரீடத்தையும் தாங்கி நிற்கும் பெருமை பெற்ற ஊர், திருப்பூர். ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தாரை வாழ வைத்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த நகரம் தற்போது இந்தியாவையே தன்னைநோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம், தொழிலாளர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் புகலிடமாக மாறி இருப்பது!

1891–ம் ஆண்டு 5 ஆயிரம் மக்களை கொண்ட சிறிய ஊராக இருந்த திருப்பூர், இன்று 8 லட்சம் மக்கள் தொகையோடு ததும்பிக்கொண்டிருக்கிறது.

விவசாயமே முக்கியதொழிலாக இருந்த திருப்பூர், பின்னலாடை நகரமாக மாறிப்போனது ஒருதனிக்கதை. சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக திருப்பூரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரது மகன் எம்.ஜி.குலாம் காதர் 1935–ம் ஆண்டு கொல்கத்தா சென்றார். அப்போது அங்கு ஒரு வீட்டில் கையால் இயங்கக் கூடிய நிட்டிங் எந்திரத்தில் பனியன் துணி உற்பத்தி செய்யப்படுவதை ஆச்சரியத்துடன் பார்த்தார். பின்னர் கொல்கத்தா நகரில் குடிசை தொழிலாக நடந்து வந்த பின்னலாடை தொழிலை நன்கு கற்ற அவர், 1937–ம் ஆண்டு திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னலாடையில் வருமானம் அதிகம் கிடைத்ததால், விவசாயிகளும் பனியன் தயாரிப்பு தொழிலில் ஈடுபட தொடங்கினர். அதனைத் தொடர்ந்து பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் திருப்பூரில் ஏற்படுத்தப்பட்டன. பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு இயற்கையும் கைகொடுத்தது என்றே கூற வேண்டும். திருப்பூர் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகம் இருந்ததால் சாயமேற்றும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. இதனால் வெள்ளை நிற பனியன்களை மட்டுமே தயாரித்து வந்த உற்பத்தியாளர்கள், விதவிதமான சாயங்கள் மூலம் கண்ணைக்கவரும் வண்ணத்துணிகளை உற்பத்தி செய்தார்கள். இதைத்தொடர்ந்து சாய தொழிலும் அசுர வளர்ச்சி பெற்றது. மேலும் நிட்டிங், டையிங், பிளீச்சிங், பேக்கிங், செக்கிங், ரைசிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங் போன்ற பனியன் தொழில் சார்ந்த உப தொழில்களும் சங்கிலித்தொடர் போல் வளர்ச்சி பெற்றன.

உள்நாட்டுக்குள்ளேயே ஆடைகளை அனுப்பி வைத்த பனியன் உற்பத்தியாளர்கள், வெளிநாடுகளுக்கும் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய எண்ணினார்கள். இதைத்தொடர்ந்து 1980–ம் ஆண்டு முதல் ஏற்றுமதி வர்த்தகம் சூடுபிடித்தது. ஆண்டுக்கு ரூ.50 கோடியில் இருந்த ஏற்றுமதி வர்த்தகம் 2003–ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. பருத்தி ஆடைகளை நேர்த்தியாக தயாரிப்பதுடன், உரிய நேரத்தில் ஆடைகளை அனுப்பி வைக்கும் காலந்தவறாத போக்கு வெளிநாட்டு வர்த்தகர்களை திருப்பூரை நோக்கி ஈர்த்தது.


நேற்றைய தொழிலாளர்கள், இன்றைய முதலாளிகளாக உருவாக வாய்ப்பு கிடைத்ததால், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் பல்கி பெருகின. மாநகரில் தற்போது 850 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களும், 6 ஆயிரத்து 250 உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இந்த தொழிலில் 6 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். முன்னேற்றப்பாதையில் சென்ற இந்த தொழில் மூலமாக தற்போது ஆண்டுக்கு ரூ.23 ஆயிரத்து 50 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. உள்நாட்டு பனியன் வர்த்தகம் ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பனியன் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 7 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டு வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்குடன் பின்னலாடை உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் பின்னலாடை நிறுவனங் களுக்கு தொழிலாளர்களின் தேவை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

திருப்பூர் பனியன் தொழில் 1980–ம் ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்த மாவட்டங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக திருப்பூர் நோக்கி குடிபெயர்ந்தனர். இரவு, பகலாக வேலை நடக்கும் பனியன் தொழில் நிறுவனங்களில் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வெளிமாவட்ட தொழிலாளர்கள் கைநிறைய சம்பாதித்தனர்.

குடும்பத்துடன் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வாடகைக்கு வீடு தேடினார்கள். தாங்கள் பணிபுரியும் பனியன் நிறுவனங்களுக்கு அருகிலேயே வீடு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால் கேட்ட பணத்தை வாடகையாக கொடுத்து தொழிலாளர்கள் குடியேறினார்கள். இதன்காரணமாக வெளிமாவட்ட தொழிலாளர்களின் சொந்த விவரங்களை பெறாமல் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் குடியமர்த்தினார்கள்.

மாநகருக்குள் பனியன் தொழில் நிறுவனங்கள் இரண்டறக்  கலந்து இருப்பதால் வீதிக்கு ஒரு டீக்கடை இருப்பதும், அதில் தேனீக்கள் போல் தொழிலாளர்கள் நிறைந்து இருப்பதும் வாடிக்கையான ஒன்றானது. அதுபோல் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நாளொன்றுக்கு ரூ.4 கோடியாக உள்ளது. பின்னலாடை வர்த்தகத்தில் மட்டுமில்லாமல் மதுவிற்பனையிலும் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் வெளிமாவட்ட தொழிலாளர்களில் பலர் சொந்த ஊரில் இருந்து திருப்பூர் திரும்புவதில் காலதாமதம் செய்தனர். அந்தகால கட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஆர்டர்களை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் வடமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை திருப்பூர் நோக்கி அழைத்து வர தொடங்கினார்கள்.

குறிப்பாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வந்தனர். சொந்த மாநிலத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட அவர்கள் குறைந்த ஊதியம் கிடைத்தாலே போதும் என்று பனியன் நிறுவனங்களில் அலைஅலையாக குவிந்தனர். குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பு வடமாநில தொழிலாளர்கள் மூலம் கிடைத்ததால் பனியன் உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனங்களில் அவர்களை பணிக்கு அமர்த்துவதில் முனைப்பு காட்டினார்கள்.

வடமாநில தொழிலாளர்களிடம் தங்கள் ஊரில் இருந்து மேலும் தொழிலாளர்களை அழைத்து வருமாறு பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறினார்கள். நாளடைவில் வடமாநில தொழிலாளர்கள் கும்பல், கும்பலாக ரெயில் மூலம் திருப்பூரில் வந்து குவிந்தனர். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கு அறை வசதி, உணவு வசதி செய்து கொடுத்து தங்க வைத்து தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வைத்தனர். இதனால் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

July 31, 2016

'நெல்லு விதைக்கலாமா... கரும்பு போடலாமா?' விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கும் விசித்திர கிராமம்


இன்றைய, ‘போக்கிமான் கோ’ உலகத்தில், நம்ம ஊரில் ஜோசியமும், ஜாதகமும் இன்னமும் பலரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது, என்பதை ஜீரணித்துக்கொள்வது கஷ்டமாகத்தான் உள்ளது.  பிள்ளைக்கு பேர் வைப்பது, பள்ளியில் சேர்ப்பது, திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, உள்ளிட்டவைகளுக்கு ஜாதகம் பார்த்திருக்கிறோம் அல்லது பார்ப்பதாக  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அடுத்துள்ள பெரமனூர் என்கிற கிராம மக்கள்,  விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கிறார்கள். பொருத்தம் சரி இல்லையென்றால், அந்தப் பயிரையே பயிர் செய்ய மாட்டார்கள்... அப்படி மீறி செய்தால், அவர்கள் குடும்பத்தில் உயிர்பலி வரைக்கும் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை" என்று நண்பர் ஒருவர் சொல்ல, பெரமனூருக்கு புறப்பட்டோம்...

பச்சைப்பசேல் வயல்வெளிகளில், செழித்து நின்ற பயிர்கள் நம்மை வரவேற்றன. ஊருக்குள் நுழைந்ததும் எதிர்பட்டார், ராமலிங்கம். அவரிடம் விவசாய ஜோசியத்தை பற்றி விசாரித்தோம்.

படபடவென பேச ஆரம்பித்தவர், ''ஆமாங்க நீங்க கேள்விபட்டது உண்மைதான். எங்க ஊர்ல என்ன பயிர் பண்ணாலும் 'குறி' ( ஜோசியம்) பார்த்துதான் செய்வோம். குறிப்பா மஞ்சள், கரும்பு, எள் இந்த மூன்றையும் சாமிகிட்ட 'குறி' கேக்காம பயிர் பண்ணவே மாட்டோம். இந்த ஊர்ல விவசாயம் பண்ற எல்லாருமே அப்படித்தான். எங்க ஊர்ல சம்பத்னு ஒரு சாமியார் இருக்கார். அவர்கிட்ட 'குறி' கேட்டுதான் இந்த முறை என் தோட்டத்துல நான்  வாழை போட்ருக்கேன். நல்லா வந்துருக்கு.

'நீ இந்த வருஷம் மஞ்சள் போட்டா சரி வராது' னு சாமி சொல்லிட்டாருன்னா, அதை பயிர் பண்ணக்கூடாது. ஒண்ணு விளைச்சல் இல்லாமப் போயிடும்... இல்ல நம்ம வீட்ல, ஆடோ மாடோ ஏதாவது உயிர்ப் பலிகள் ஏற்பட்டுடும். அதற்கு பிறகு நாம மீள்றது கஷ்டம். ஏன்... சமயத்துல மனுஷங்களே செத்துப் போயிடுவாங்க. எங்க குல தெய்வத்துக்கு கருப்பு ஆகாது. அதையும் மீறி ஒரு வருஷம் எள் பயிர் பண்ணோம்.  அறுவடை சமயத்துல எங்க அப்பா செத்துப் போயிட்டாரு. அதுல இருந்து சாமிக்கிட்ட குறி கேக்காம எதையும் செய்யுறது இல்லை.

எந்த பயிர் பண்றமோ அந்த பயிர் நம்ம பேருக்கு ஒத்துவருமானு பாக்கணும். நம்ம பேருக்கு ஒத்து வராட்டியும் நம்ம வீட்ல யாருக்காவது ஒத்து வந்தாக்கூட பயிர் பண்ணலாம். ஒருமுறை எங்க வயல்ல நெல் போடலாமானு சாமிகிட்ட கேட்டேன். என் பேருக்கு ஒத்துவரல... என் பொண்டாட்டி பேருக்கும், ஒத்துவரல... பொறந்து ஒரு வருஷமான என் மகனுக்கு ஒத்து வந்துச்சி. அதனால கைக்குழந்தையை தூக்கிக்கிட்டு போய், அவன் கையால முதல் விதையை போட்டோம். நல்ல விளைச்சல் அந்த வருஷம். வைக்கோல் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சி. நான் முற்போக்குவாதிதான். ஆனா, இந்த விஷயத்துல இப்படி பண்ணினாதான் சரியா வருது''. (நமக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ஆனாலும், ராமலிங்கம் சளைக்காமல் தொடர்ந்தார்...)

''அவ்வளவு ஏன்... அந்த சம்பத் சாமியவே எடுத்துக்கோங்க. அவர் வயலும் அவங்க அண்ணன் வயலும் பக்கத்து பக்கத்துலதான் இருக்கு. ஒரே தண்ணி ஒரே மண்ணுதான். சம்பத் சாமிக்கு மஞ்சள் ஒத்துவரும். ஆனா, அவங்க அண்ணனுக்கு ஒத்து வராது. அவங்க அண்ணன் காய்கறி மட்டும்தான் பயிர் பண்ணுவார். இந்த ஊர்ல எல்லாருக்குமே அவங்க அவங்களுக்கு  நம்பிக்கையான சாமியாருங்க இருக்காங்க. அவுங்ககிட்ட ரகசியமா குறி கேட்டுத்தான் பயிர் பண்ணுவாங்க. வெளில யாருக்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.'' என்று நிறுத்தினார்.

" நாங்க சம்பத் சாமியை பார்க்கலாமா...?" என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் நம்மை அழைத்துச் சென்றார்.

சம்பத் சாமியிடம் பேசினோம். ''நான் 8 வருஷமா குறி பாக்குறேன். இந்த ஊர்ல இருந்து நிறைய பேர் என்கிட்ட பார்ப்பாங்க. அவங்கவங்க பேருக்கு இன்ன பயிர் ஒத்து வருமானு பொருத்தம் பார்த்து சொல்லுவேன். அதுபடிதான் கேப்பாங்க. நானே பொருத்தம் பார்த்துதான் இந்த முறை மஞ்சள் போட்ருக்கேன்'' என்றார்.

திரும்பும் வழியில் ரவி என்பவரிடம் பேசினோம். ''நான் இந்தமுறை மஞ்சள் போடலாம்னு இருந்தேங்க. எங்க வீட்ல யாரு பேருக்குமே ஒத்து வரல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... பார்ப்போம்'' என்று நடையைக் கட்டினார்.

என்னத்த சொல்ல..?

July 30, 2016

செழிப்பான வருமானம் தரும் சேம்பு!


ஒரு ஏக்கர்...  1 லட்சத்து 22 ஆயிரம்

உருளைக்கிழங்குக்கு இணையான சுவை மற்றும் சத்துகளைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பங்கிழங்கு. இது தரைப்பகுதியிலேயே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற நறுமணப் பொருட்களைச் சேர்த்து இறைச்சி போலவே இதை சமைத்துப் பரிமாறும் பழக்கமும் உண்டு. அதனால், எப்போதும் நல்ல தேவை உள்ள காய்கறிகளில் சேப்பங்கிழங்கும் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. தன்னை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளை, வருமானத்தால் செழிக்க வைக்கும் பயிர்கள் வரிசையிலும் இது இடம் பிடித்திருக்கிறது!

இதை, 'உண்மை’ என ஆமோதிக்கும், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், தொடர்ந்து சேப்பங்கிழங்கு சாகுபடி செய்பவர்களில் ஒருவர். ஒரு மதிய வேளையில்  சந்தித்தபோது, அறுவடைப் பணியை மேற்பார்வை செய்தபடியே உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், கோவிந்தராஜ்.

குத்தகை நிலத்தில் குதூகல சாகுபடி!

''பி.இ. சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, நாலு வருஷம் ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். அது சரியா வராததால வேலையை விட்டுட்டு, சொந்தமா ஒப்பந்த முறையில வீடு கட்டிக்கொடுக்குற வேலையை மூணு வருஷம் பார்த்தேன். அதுவும் திருப்தியா இல்லை. அதையும் விட்டுட்டு நண்பர்களோட சேர்ந்து ஒப்பந்த முறையில் காய்கறி உற்பத்தியை ஆரம்பிச்சேன். விவசாயிகள்ட்ட விதை கொடுத்துடுவோம். அவங்க சாகுபடி செய்றதுக்காக ஒரு தொகையைக் கொடுத்துட்டு, காய்கறிகளை வாங்கி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பிடுவோம். அது இப்போவரைக்கும் நல்லா போய்க்கிட்டு இருக்கு.



எங்க தாத்தா காலத்துலயே பரம்பரை நிலங்களை வித்துட்டாங்க. எங்க அப்பா, சொந்தக்காரங்களோட நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செஞ்சுதான் எங்களைப் படிக்க வைச்சார். அதனால எனக்கும் விவசாயம் மேல கொஞ்சம் ஆர்வம் உண்டு. நான், பத்து வருஷமா 16 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்'' என்று முன்கதை சொன்ன கோவிந்தராஜ், தொடர்ந்தார்.

அதிக விலை கிடைக்கும் சேம்பு!

''ஆரம்பத்துல நிலத்துக்கான குத்தகைத் தொகை குறைவா இருந்துச்சு. இப்போ 16 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய் குத்தகைத் தொகையா கொடுக்கிறேன். ஆரம்பத்துல மல்லாட்டை (நிலக்கடலை), நெல், பருத்தி, கரும்புனு சாகுபடி செய்தேன். குறைவான அளவுல காய்கறிகளையும் சாகுபடி செய்தேன். கோயம்பேடு மார்க்கெட்டுல விலை அதிகம் கிடைக்கிற காய்கறிகளைத்தான் நாங்க விவசாயிகள்ட்ட சாகுபடி செய்யச் சொல்வோம். அந்த வகையில சேம்புக்கு நல்ல விலை கிடைக்குறதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதில்லாம எங்கள் ஊர்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர்ல இருக்குற ’சாலையனூர்’ கிராமம் சேம்பு சாகுபடிக்கு ஃபேமஸ். அதனால நானும் நாலரை ஏக்கர்ல சேம்பு சாகுபடியை ஆரம்பிச்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சுட்டிருக்கு.



ஒரு சென்ட் நிலத்துல ஒரு மூட்டை (80 கிலோ) கிழங்கு கிடைக்கும். பெருசா நஷ்டமோ, பூச்சித்தாக்குதலோ, நோய்த் தாக்குதலோ இருக்காது. எல்லாருமே சேம்பு சாப்பிடலாம்.  கிராமத்தைவிட நகரப் பகுதிகள்ல விற்பனை வாய்ப்பு அதிகமாவே இருக்கு. குறிப்பா, சென்னையில நிறைய தேவை இருக்குறதால, விற்பனையில பிரச்னையே இல்லை.

நாலரை ஏக்கர் சேம்பு தவிர, 3 ஏக்கர்ல நெல்; 3 ஏக்கர்ல பருத்தி; 3 ஏக்கர்ல மல்லாட்டை; 2 ஏக்கர்ல உளுந்து, துவரை, பாசிப்பயறு; 30 சென்ட்ல மஞ்சள்; 20 சென்ட்ல கருணைக்கிழங்குனு பயிர் செஞ்சிருக்கேன். இதுவரைக்கும் ரெண்டரை ஏக்கர்ல சேம்பு வெட்டு முடிஞ்சுது. கிராமங்கள்ல பொங்கல் பண்டிகைக்குச் செய்யுற கூட்டுல கண்டிப்பா சேம்பு சேர்த்துக்குற பழக்கம் இப்பவும் இருக்கு. அதனால, மீதி ரெண்டு ஏக்கர்ல இருக்குற கிழங்குகளை பொங்கல் சமயத்துல வெட்டி அனுப்புவேன்'' என்ற கோவிந்தராஜ், சேப்பங்கிழங்கு சாகுபடி முறைகளைச் சொன்னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஏக்கருக்கு 500 கிலோ விதைக்கிழங்கு!

'சேப்பங்கிழங்கின் சாகுபடிக் காலம் 6 மாதங்கள். களிமண் வகை தவிர மற்ற எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. நடவு செய்வதற்கு வைகாசிப் பட்டம், தைப் பட்டம் ஏற்றவை. தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 10 டிப்பர் என்ற கணக்கில் எருவைக் கொட்டிக் களைத்து, இரண்டு சால் ரோட்டோவேட்டரால் உழவு செய்து 10 நாட்கள் ஆறப்போட வேண்டும். பிறகு, நிலத்தில் முளைத்து வரும் களைகளை... இரண்டு சால் ரோட்டாவேட்டர் உழவு செய்து புரட்டி விட்டு நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். மாட்டு ஏர் ஓட்டி, 2 அடி அளவில் பார் ஓட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, தண்ணீர் கட்டி பாரின் ஒரு பகுதியில் முக்கால் அடி இடைவெளியில் ஒரு விதைக்கிழங்கு வீதம் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 500 கிலோ அளவில் விதைக்கிழங்குகள் தேவைப்படும் (அறுவடை செய்த கிழங்குகளை இரண்டு மாதங்கள் நிழலில் கொட்டி வைத்தால், முளைப்பு எடுக்கும். இவற்றைத்தான் விதைக்கிழங்குகளாகப் பயன்படுத்த வேண்டும்). 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சூடோமோனஸ் கலந்து முளைப்பு எடுத்த 500 கிலோ விதைக்கிழங்குகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

180-ம் நாள் அறுவடை!



நடவு செய்த 7-ம் நாளில் வேர்பிடித்து வளரத் தொடங்கும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 25-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 50ம் நாளில் செடிகளை மையமாக வைத்து, கரையைப் பிரித்துக் கட்டி... 300 கிலோ எருவுடன் கலப்பு உரத்தைக் கலந்து செடிகளுக்கு நிரந்து வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை 5 கிலோ சூடோமோனஸ் கலவையைத் துணியில் கட்டி பாசன தண்ணீர் செல்லும் வாய்க்காலில் வைக்க வேண்டும். 70ம் நாளில் டேங்குக்கு (10 லிட்டர்) 100 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 10 டேங்குகள் தேவைப்படும். இதை பூச்சி, நோய்கள் பெரிதாகத் தாக்குவதில்லை. 25-ம் நாளில் இருந்து வேர்கள் போல உருவாகி, 65ம் நாளில் கிழங்குகள் பிரிய ஆரம்பித்து, 180-ம் நாளில் வெட்டுக்குத் தயாராகிவிடும்.''

ஏக்கருக்கு 10 டன் மகசூல்!

சாகுபடிப் பாடம் முடித்த கோவிந்தராஜ், 'ஒவ்வொரு செடியிலும் அரை கிலோ முதல் முக்கால் கிலோ அளவுக்கு கிழங்குகள் இருக்கும். கிழங்குகளை அறுவடை செஞ்சு தரம் பிரிச்சு மூட்டை பிடிச்சு மார்கெட்டுக்கு அனுப்பிடுவேன். ஒரு ஏக்கர்ல 8 டன்ல இருந்து 12 டன் வரைக்கும் கிழங்கு கிடைக்கும்.  சராசரியா 10 டன் கிழங்கு கிடைச்சுடும். ஒரு கிலோ கிழங்கு 18 ரூபாய்ல இருந்து 25 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். சராசரியா கிலோவுக்கு 20 ரூபாய்னு வெச்சுக்கிட்டா...

10 டன் கிழங்குக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல செலவெல்லாம் போக,  ஒண்ணேகால் லட்ச ரூபாய் வரை லாபம் கையில நிக்கும்'' என்று கணக்கு வழக்குகளைச் சந்தோஷமாகச் சொன்னார்.



தொடர்புக்கு,

கோவிந்தராஜ், செல்போன்: 8122580472 

July 29, 2016

தலைமை ஆசிரியரால் நீக்கப்பட்ட விதவைப் பெண்ணுக்கு மீண்டும் சமையலர் பணி வழங்கிய கலெக்டர்


பள்ளியில் சமையல் வேலை செய்து வந்த தலித் விதவை பெண்ணை பணி நீக்கம் செய்த தலைமை ஆசிரியரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்ததுடன், அந்த பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டார்.

பள்ளியில் சமையல் வேலை செய்து வந்த தலித் விதவை பெண்ணை பணி நீக்கம் செய்த தலைமை ஆசிரியரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்ததுடன், அந்த பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டார்.

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பதுரா கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த  ஊர்மிளா என்ற பெண் தன் கணவருடன் சேர்ந்து சமையல் பணி செய்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்துவிட்டார். இதனை காரணமாக வைத்து ஊர்மிளாவை பணியில் இருந்து நீக்கிய தலைமையாசிரியர், வேறு ஒருவருக்கு அந்த வேலையை கொடுத்துள்ளார். ஊர்மிளாவை மீண்டும் வேலையில் சேர்க்க லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், ஊர்மிளா பாட்னாவில் உள்ள மாவட்ட கலெக்டர் கன்வால் தனுஜை நேரில் சந்தித்து தனது நிலை குறித்து தெரிவித்துள்ளார். உடனே சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கலெக்டர், அங்கு பதிவேடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததை அறிந்து தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், அந்த பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, ஊர்மிளா அந்தப் பள்ளியில் சமையல் வேலையை தொடங்கினார். அவர் சமைத்த உணவை மாவட்ட கலெக்டர், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஊர்மிளா மீண்டும் சமையல் வேலைக்கு வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலெக்டரின் உத்தரவையடுத்து பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

July 22, 2016

சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படும் மின்சாரம் இல்லாமல் நாற்று நடும் எளிய கருவி


மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை முத்துப்பேட்டை பள்ளி மாணவி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா. இவர் எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு விட முடியும். இந்த கருவியை உருவாக்க பிளைவுட் ஷீட், போம் ஷீட். சைக்கிள் பிரிவீல், சைக்கிள் செயின், தேவைக்கேற்ற அளவுகளில் சிறிய, பெரிய நட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன், அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு வயலில் மாணவி சரண்யா கருவியை இயக்கி காட்டினார். இதைப்பார்த்த ஆசிரியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மாணவியின் சாதனையை கண்டு வியந்து பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி சரண்யா கூறுகையில், உழவுத்தொழிலை விட்டு வெளியேறி வேறு தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதிகமான பண விரயம். ஆட்கள் பற்றாக்குறை. அதிகமான கூலி, இயற்கை இடர்பாடுகள், எரிசக்தி மூலங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலையை அடைந்துள்ளது. எனவே எரிசக்தி பயன்பாடு இல்லாமல், குறைவான மனித சக்தியை பயன்படுத்தி, குறைவான பொருளாதார மதிப்பீட்டில் நாற்றுநட கருவி உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எங்கள் ஆசிரியர்களின் உதவியோடு இக்கருவியை வடிவமைத்துள்ளேன்.
கருவியை எப்படி உருவாக்கினேன் என்றால், பண்டைய காலத்தில் ஏர் கலப்பை போன்றவற்றை மரத்தில் செய்தே பயன்படுத்தினர்.

குறைவான செலவில் மரப்பலகையைக் கொண்டு ஒரு பெரிய சக்கரம் ஒன்றை செய்தேன். அதனை இரும்பு மையத்தைக்கொண்டு இணைத்தேன். பின்னர் சைக்கிள் செயின் உதவியோடு நான்கு அடி பிளைவுட் ஷீட்டில்  இணைத்தேன். அதை மேலும் கீழும் இயங்குமாறு செய்தேன். மேலும், கீழும் இயங்கும் இடத்தில் நாற்றுகளை அடுக்கி வைக்க  பிளைவுட்டைக் கொண்டு 120 டிகிரி கோண அளவில் பிளைவுட் சாய்வு ஒன்றை தயார் செய்தேன். முன்பக்க பெரிய சக்கரத்திற்கு முன்னால் படகு போன்ற அமைப்பில் பிளைவுட்டை கொண்டு அமைத்தேன். அதில் கயிறு கட்டி இழுப்பதற்கு கம்பி வளையம் அமைத்தேன். பிளைவுட் ஷீட்டின் அடிப்பகுதியிலும், சக்கரங்களிலும் சேறு  பிடித்து கொள்ளாமல் இருக்க போம் ஷீட்டை பயன்படுத்தி ஒட்டி கருவியை உருவாக்கினேன். வழக்கமாக ஒரு விவசாயி 200 நாற்றுகள் நட அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் ஆகும். இந்த கருவியில் 10 நிமிடத்தில் நட்டு விடலாம் என்றார். மாணவியின் இந்த கருவி இன்று நன்னிலத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான “இன்ஸ்பெயர்” அவார்டு போட்டியில் இடம் பெறுகிறது.